513 அரசு பள்ளிகளில்தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


513 அரசு பள்ளிகளில்தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

தேனி

தேனி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கலந்துகொண்டார். கலெக்டர் தலைமையில் அங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் 513 அரசு பள்ளிகளில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதுகுறித்து கலெக்டர் ஷஜீவனா கூறும்போது, 'பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சுகாதாரமான குடிநீர், வகுப்பறை, பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்வது, குப்பைகளை முறையாக பராமரிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட செயல்பாடுகளை மாணவர்களிடம் ஊக்குவிப்பதற்கான பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமையில் நடக்கும்' என்றார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, லட்சுமிபுரம் பள்ளி தலைமை ஆசிரியை பேபி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story