5,297 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்


5,297 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்
x

5,297 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வினை 5 ஆயிரத்து 297 மாணவ, மாணவிகள் எழுதினர். 143 பேர் தேர்வு எழுத வரவில்லை.

நீட் தேர்வு

இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நீட்தேர்வை இந்தியா முழுவதும் தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, 2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது.

7 மையங்களில்......

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 7 மையங்களில் இந்த நீட் தேர்வு நடைபெற்றது. தஞ்சையில் தாமரை பன்னாட்டுப்பள்ளி, பிளாசம் பப்ளிக் பள்ளி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலும், கும்பகோணத்தில் தாமரை பன்னாட்டுப்பள்ளி, மகரிஷிவித்யா மந்திர் பள்ளி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி, பட்டுக்கோட்டை பிரிலியண்ட் பள்ளி ஆகிய 7 இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 5 ஆயிரத்து 440 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

நீட் தேர்வு நடைபெற்றதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நீட் தேர்வு மதியம் 2 மணிமுதல் 5.20 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் காலை 10 மணி முதலே மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் மையங்களுக்கு வரத்தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வந்த மாணவர்கள் கார்களில் வந்தனர். அவர்களுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர்.

ஒலி பெருக்கியில் அறிவிப்பு

தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளி முன்பு தேர்வு எழுத மாணவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா? என பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். போட்டோ இல்லாமல் வந்திருந்த மாணவர்களுக்கு வசதியாக போட்டோ எடுப்பதற்காக பள்ளி முன்பு ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. அதில் மாணவர்கள் புகைப்படங்களை ஒட்டி எடுத்துச்சென்றனர்.

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் முழுக்கை சட்டை அணியக்கூடாது, மாணவிகள் காதுகளில் தோடு, மூக்குத்தி, காதுமாட்டி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது. கிளிப் மாட்டக்கூடாது. மாணவர்கள் பெல்ட் அணியக்கூடாது. கைக்கெடிகாரம், கால்குலேட்டர், தொப்பி, ஹெட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

பெற்றோரிடம் வாழ்த்து

தேர்வு எழுத சென்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் ஆசி பெற்றுவிட்டு சென்றனர். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 297 பேர் தேர்வு எழுதினர். 143 பேர் தேர்வு எழுதவரவில்லை. தேர்வு மையங்களை சுற்றிலும், தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story