பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 53 பேர் கைது


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 53 பேர் கைது
x
திருப்பூர்


தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 53 பேரை போலீசார் கைது செய்தனர்.

என்.ஐ.ஏ. சோதனை

தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த சோதனையை நடத்துவதாக கூறியும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருப்பூர் காங்கயம் ரோடு சி.டி.சி. கார்னரில் நேற்று மதியம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஹபீபுர் ரகுமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் பஷீர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

53 பேர் கைது

பின்னர் காங்கயம் ரோடு ராஜீவ்நகர் பிரிவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அதன்படி 17 பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுபோல் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில பேச்சாளர் முபாரக் பாட்ஷா தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். வடக்கு போலீசார் அங்கு வந்து 16 பேரை கைது செய்து காலேஜ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story