நெடுஞ்சாலைகளை தணிக்கை செய்ய 53 பொறியாளர்கள் நியமனம்


நெடுஞ்சாலைகளை தணிக்கை செய்ய 53 பொறியாளர்கள் நியமனம்
x
திருப்பூர்


தமிழகத்தில் விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைகளை தணிக்கை செய்ய 53 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

தரமான சாலையை அமைத்தால் சுகமான பயணத்தை நாம் மேற்கொள்ள முடியும். மையத்தடுப்புகள் முறையாக அமைக்க வேண்டும்.

வேகத்தடை அவசியம்

சாலையில் பள்ளம் அமைக்கும்போது பள்ளத்தை தோண்டும்போது அங்கு பேரிகார்டு கண்டிப்பாக அமைப்பது அவசியம். வேகத்தடை ஐ.ஆர்.சி. வழிமுறைப்படி அமைக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் இருந்து குறுக்கு சாலை தேசிய, மாநில நெடுஞ்சாலையுடன் இணைகிறது. சந்திக்கும் இடங்களில் கண்டிப்பாக வேகத்தடை அமைக்க வேண்டும்.

விபத்தை குறைக்க பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், அண்ணா பல்கலைக்கழக துறை தலைவர்களை அழைத்து 355 பொறியாளர்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 53 பொறியாளர்கள் சாலையை தணிக்கை செய்வதற்கு பயிற்சி பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று சாலை பணிகளை தணிக்கை செய்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'தொழில் நகரான திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பாலப்பணிகள் நடக்கிறது. புறவழிச்சாலைகள் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.

பாராட்டு சான்றிதழ்

கூட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டை அமைச்சர்கள் வெளியிட்டனர். மாவட்டத்தில் அவசர ஊர்திகளில் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர்களின் சேவையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சாலை விபத்தில் காயமடைந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் காசோலைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் (நெடுஞ்சாலை) பிரதீப் யாதவ், கலெக்டர் வினீத், திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், பின்னலாடை தொழில்துறையினர், தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர்.


Next Story