வாக்காளர் அட்டையுடன் 53 சதவீதம் ஆதார் எண் இணைப்பு


வாக்காளர் அட்டையுடன் 53 சதவீதம் ஆதார் எண் இணைப்பு
x

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 53.5 சதவீதம் முடிவடைந்துள்ளது என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 53.5 சதவீதம் முடிவடைந்துள்ளது என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்

நாடுமுழுவதும் வாக்காளர் பட்டியலில் காணப்படும் குளறுபடிகளை நீக்கவும், வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பதை தடுக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணியில் 1,301 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம் 6 பி-யில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில் பெற்று இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

53.5 சதவீதம்

வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 6 லட்சத்து 78 ஆயிரத்து 536 பேர் தங்களின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இது 53.51 சதவீதமாகும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்ணையும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 9-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து வருகிற 12, 13-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இணைத்து கொள்ளலாம். மேலும் இ-சேவை மையங்கள் மற்றும் ஆன்லைனில் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம் என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story