தூத்துக்குடியில் 53 டாஸ்மாக் கடைகள் 22-ந் தேதி மூடல்
தூத்துக்குடியில் 53 டாஸ்மாக் கடைகள் 22-ந் தேதி மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 22-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி 1-ன் படி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள 53 டாஸ்மாக் கடைகளும், பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த நாளில் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.
மேலே குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.