54,727 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை - கலெக்டர் அனிஷ்சேகர் தகவல்


54,727 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை - கலெக்டர் அனிஷ்சேகர் தகவல்
x

மதுரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 727 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் அனிஷ்சேகர் கூறினார்

மதுரை


மதுரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 727 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் அனிஷ்சேகர் கூறினார்.

நலவாரியம்

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக சிறப்பு முகாம்கள் மற்றும் மருத்துவக்குழு மூலமாகவும், இதுவரை 54 ஆயிரத்து 727 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 10 வயதிற்கு மேற்பட்ட 30 ஆயிரத்து 915 மாற்றுத்திறனாளிகள், நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து மருத்துவச்சான்று வழங்குவதை எளிதாக்கும் வகையில் தற்போது மாவட்டத்தில் 5 இடங்களில் மாதம் ஒன்றிற்கு 13 மருத்துவ முகாம்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச்சான்று வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் அரசு மருத்துவமனையிலும், முதல் மற்றும் மூன்றாம் திங்கட்கிழமை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலும், மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை திருமங்கலம் அரசு மருத்துவமனையிலும், மாதத்தின் முதல் புதன்கிழமை மேலூர் அரசு மருத்துவமனையிலும், இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

வீடு முன்னுரிமை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் கலெக்டர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறையும், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு அந்தந்த பகுதி மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என மொத்தம் 6 ஆயிரத்து 808 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் பல்வேறு வங்கிக்கடன் திட்டங்களின் கீழ் 88 பேருக்கு ரூ.9 லட்சம் மானியத்துடன் வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையங்கள் தொடங்க ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 10 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இல்லம் தேடி சிகிச்சை

முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதுமின்றி அவர்கள் குடும்பத்திற்கே காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 978 நபர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பினை அதிகரிக்க செய்திடும் வகையில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இதுவரை 628 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 522 பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலவாரிய பதிவு பெற்றவர்களுக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கிற்கான தொகை, மாற்றுத்திறனாளிகளின் மகன் மற்றும் மகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story