5½ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5½ டன் வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் முத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி மற்றும் கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்துகொண்டு தங்களது வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.
இதன்படி நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 10,504 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். டெண்டர் முறையில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.24.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.15-க்கும் ஏலம் விடப்பட்டது.
தேங்காய் பருப்பு ஏலம்
மேலும் 42 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.79.15-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.62.65-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1997 தேங்காய்களும், 9 தேங்காய் பருப்பு மூட்டைகளும் குறைவாகவே கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.4-ம், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.5.50-ம் குறைவாகவே விவசாயிகளுக்கு கிடைத்தது. மேலும் கடந்த 4 வாரங்களாக வரத்து இல்லாததால் எள் ஏலம் நடைபெறவில்லை.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தேங்காய் பருப்பு விலை கிலோ ரூ.90-ஐ தாண்டி ஏலம் விடப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை ரூ.90-க்கும் கீழே விலை சரிந்து ஏலம் விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
5½ டன் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு, எள் மூட்டைகள் 5½ டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 776-க்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.