விவசாயிகளுக்கு வழங்க 55 ஆயிரம் மரக்கன்றுகள்
நத்தம் பகுதியில் விவசாயிகளுக்கு வழங்க 55 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளிடம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையிலும், பசுமையை அதிகரிக்கும் நோக்கத்திலும் 2023-24-ம் ஆண்டு பசுமை தமிழ்நாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள், பொதுமக்கள் தங்களின் பட்டா நிலங்களில் வளர்க்க வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதன்படி நத்தம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க, சாணார்பட்டி அருகே கணவாய்பட்டியில் வன அலுவலர் குடியிருப்பு வளாக நாற்றங்காலில் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் மகாகனி 27 ஆயிரத்து 500-ம், தேக்கு 16 ஆயிரத்து 500-ம், குமிழ் 5 ஆயிரத்து 500-ம், நெல்லி 5 ஆயிரத்து 500-ம் என மொத்தம் 55 ஆயிரம் மரக்கன்றுகள் நாற்றங்காலில் வளர்க்கப்பட்டு வருகிறது. இவை இன்னும் 3 மாதங்களில் நடவுக்கு தயாராகி விடும். அதன்பிறகு நத்தம் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் தங்களது பட்டா, ஆதார், புகைப்படங்களை வழங்கி பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதுதொடர்பாக விவரங்களுக்கு நத்தம் வனச்சரகர் அலுவலகத்தை அணுகலாம் என்றனர்.