குலதெய்வ வழிபாட்டிற்காக மாட்டு வண்டியில் வந்த 56 கிராம மக்கள்
சிவகாசி அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு கமுதியில் இருந்து மாட்டு வண்டியில் 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் புறப்பட்டு வந்தனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு கமுதியில் இருந்து மாட்டு வண்டியில் 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் புறப்பட்டு வந்தனர்.
குலதெய்வ வழிபாடு
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் வசித்து வந்த ஒரு குடும்பம் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னர் கமுதிக்கு பிழைப்பு தேடி சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வந்து எம்.புதுப்பட்டியில் உள்ள குலதெய்வ சாமியான கூடமுடையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு நடந்தே 100 கிலோ மீட்டர் தூரம் உள்ள கமுதிக்கு சென்றுள்ளனர்.
காலப்போக்கில் நடைபயணம், மாட்டு வண்டி பயணமாக மாறியது. அதன் பின்னர் கடந்த 100 ஆண்டுகளாக இவர்கள் தங்கள் குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் கூடமுடையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
56 கிராமம்
கமுதி அருகே உள்ள அகத்தாயிருப்பு உள்ளிட்ட 56 கிராம மக்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கிருந்து புறப்பட்டு மண்டபம் சாலை, பாலவநத்தம், சங்கரலிங்காபுரம், வடமலா புரம் வழியாக சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டிக்கு வந்து கூட முடையார் கோவிலில் 7 நாட்கள் தங்கி சிறப்பு பூஜை செய்துவிட்டு பின்னர் மாட்டு வண்டி பயணமாகவே கமுதி திரும்புகிறார்கள். இவர்கள் கடந்த புதன்கிழமை அகத்தாயிருப்பு பகுதியில் இருந்து புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை எம்.புதுப்பட்டி வந்தனர். இந்த 56 கிராமத்தை சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினர் ராஜபாளையத்தில் உள்ள எரிச்சீஸ்வரர் இருளப்ப சாமி கோவிலுக்கும், ஒரு பிரிவினர் மல்லி வீரமாகாளியம்மன் கோவிலுக்கும், ஒரு பிரிவினர் எம்.புதுப்பட்டி கூடமுடையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
3 ஆயிரம் பேர்
கமுதியில் இருந்து மாட்டு வண்டி, டிராக்டர், சரக்கு வாகனம் ஆகியவைகளில் பயணம் செய்த இவர்கள் நேற்று முன்தினம் இரவு வடமலாபுரம் பகுதியை வந்தடைந்தனர். பின்னர் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டு சிலர் ராஜபாளையத்துக்கும், சிலர் மல்லிக்கும், சிலர் எம்.புதுப்பட்டிக்கும் சென்றனர். எம்.புதுப்பட்டி கூடமுடையார் கோவில் அருகில் காலை 11 மணிக்கு சுமார் ஆயிரம் குடும்பத்தை சேர்ந்த 3 ஆயிரம் பேர் திரண்டனர்.
தினமும் சைவ சமையல் செய்து சாப்பிடும் இவர்கள் சனிக்கிழமை அன்று நடைபெறும் பொதுப்பூஜைக்கு பின்னர் அசைவ உணவு சாப்பிடுவார்கள். சாமி தரிசனம் முடித்த பின்னர் 56 கிராமத்தை சேர்ந்தவர்களும் கூடமுடையார் கோவில் எல்லையை கடந்து சென்று அங்கு ஆடு வெட்டி உறவினர்களுக்கு விருந்து அளிப்பது வழக்கம். இதற்காக பல்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் 1,500 ஆடுகளை கொண்டு வந்துள்ளனர்.
பாக்கியம்
இதுகுறித்து அகத்தாயிருப்பு பழனிவேல்ராஜன் கூறியதாவது:-
எங்கள் முன்னோர்கள் கடந்த 300 ஆண்டுகளாக இந்த குலதெய்வ வழிபாடு பயணத்தை நடத்தி வந்துள்ளனர். தற்போது நாங்கள் வருகிறோம். இதற்காக நாங்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 16 நாட்கள் செலவிடுகிறோம். உறவுகளை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி. அதைவிட 7 நாட்கள் தொடர்ந்து குலதெய்வ கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்து என்பது யாருக்கும் கிடைக்காத பாக்கியம். 56 கிராமங்களை சேர்ந்த உறவுகள் இந்த ஒரு இடத்தில் தான் சந்திக்க முடியும். வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் வசிப்பவர்கள் கூட பொது பூஜைக்கு கூடமுடையார்கோவிலுக்கு வந்து விடுவார்கள் என்றார்.