560 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கடையநல்லூரில் 560 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பேட்டை மலம்பாட்டை சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே பயணிகள் ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தனிப்பிரிவு போலீசார் அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களில் இருந்து ரேஷன் அரிசிகளை கடத்திக் கொண்டு வந்து பயணிகள் ஆட்டோ மூலம் 40 கிலோ வீதம் 14 மூட்டைகளில் 560 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. உடனே தனிப்பிரிவு ஏட்டு அப்துல் மஜீத், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் ஆட்டோவை ஓட்டி வந்த புதுக்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த சாமி (வயது 38), அதே பகுதியைச் காலனி தெருவை சேர்ந்த கார்த்திக் (20) ஆகியோரை பிடித்தனர். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், பயணிகள் ஆட்டோ, அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.