58 கிராம கால்வாயால் பாதிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்


58 கிராம கால்வாயால் பாதிப்பு; கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிராமத்தின் நடுவே செல்லும் 58 கிராம கால்வாயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை மாற்று வழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை

உசிலம்பட்டி

கிராமத்தின் நடுவே செல்லும் 58 கிராம கால்வாயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை மாற்று வழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கால்வாயால் பாதிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி மதகிலிருந்து பாப்பாபட்டி கண்மாய்க்கு லிங்கப்பநாயக்கணூர், சுளிஒச்சான்பட்டி கிராமத்தின் நடுவே 58 கால்வாய் நீர் சென்று வருகிறது.

கிராமத்தின் நடுவே செல்லும் இந்த நீர் காரணமாக லிங்கப்பநாயக்கணூர், சுளிஒச்சான்பட்டி, எராம்பட்டி, மாவிலிபட்டி, குயவன்கோவில்பட்டியைச் சேர்ந்த 6 கிராமத்தை சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், விவசாயிகள் நீரை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது,

இந்தநிலையில் மாற்று வழியில் நீரைக் கொண்டு செல்ல வலியுறுத்தி, பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லாததால் லிங்கப்பநாயக்கணூர், சுளிஒச்சான்பட்டி, எராம்பட்டி, வாய்ப்பாடி, மாவிலிபட்டி, குயவன்கோவில்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைமறியல்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி தாசில்தார் கருப்பையா, உசிலம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரன் மற்றும் உத்தப்பநாயக்கனூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் விரைவில் மாற்று பாதையில் நீரை கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. நீரை மாற்று பாதையில் கொண்டு செல்லவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.


Next Story