சேலம் அம்மாபேட்டை மண்டலத்தில் ஒரு மாதத்தில் 583 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
சேலம் அம்மாபேட்டை மண்டலத்தில் ஒரு மாதத்தில் 583 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் பொருட்கள்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்காக ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில், கடைகள் உள்பட பல்வேறு இடங்களில் சுகாதார பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சேலம் அம்மாபேட்டை குமரகிரி ஏரி சாலையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் மாநகர நல அலுவலர் யோகானந்த் மற்றும் சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அழிப்பு
அப்போது அங்கு பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட அட்டைக்கப்புகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து மொத்தம் 83 கிலோ அட்டைக்கப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தொழிற்சாலைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அம்மாபேட்டை மண்டலத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்கள் எந்திரம் மூலம் நசுக்கி அழிக்கப்பட்டன.