5,889 பயனாளிகளுக்கு ரூ.27½ கோடியில் நலத்திட்ட உதவிகள் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்
திருவண்ணாமலையில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 5,889 பயனாளிகளுக்கு ரூ.27½ கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
திருவண்ணாமலையில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 5,889 பயனாளிகளுக்கு ரூ.27½ கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
கூட்டுறவு வார விழா
திருவண்ணாமலையில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடைபெற்றது. "கூட்டுறவுகளுக்கான எளிதான வணிகம் அரசு மின் சந்தை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு" என்ற பிரதான பொருளின் அடிப்படையில் நடந்த விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 5,889 பயனாளிகளுக்கு ரூ.27 கோடியே 70 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் நடராஜன் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான ஜெயம், திட்ட விளக்க உரையாற்றினார். கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ்குமார் உறுதிமொழி வாசித்தார்.
துணை பதிவாளர்கள் ஆரோக்கியராஜ், ராஜசேகரன், கமலக்கண்ணன், பிரேம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது:-
வளர்ச்சி திட்டங்கள்
பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு கூட்டுறவு சங்கங்களுக்கு உயிர் கொடுத்தார். அவரது பிறந்த நாளை இன்று கூட்டுறவு வார விழாவாக கொண்டாடுகிறோம்.
தமிழகத்தில் கூட்டுறவுத் துறை சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதிகளவு கடன்கள் கொடுத்த மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகள் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாய கடன் தள்ளுபடி செய்தவர் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி. இந்தியாவிலேயே நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு.
குறுகிய காலக்கட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலவச மின்சாரம்
பிற மாநிலங்களில் தேர்தல் நேரத்தில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்து வருகின்றனர். அதற்கு காரணம் மறைந்த முதல் அமைச்சர் கருணாநிதி என்பதை ஒவ்வொரு விவசாயியும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கூட்டுறவு வங்கியில் மட்டுமே ஏழைய மக்கள் எளிதில் கடன் பெற முடியும். ஊழியர்களாகிய நீங்கள் அனைவரும் கூட்டுறவு வங்கியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகர மன்ற நிர்மலா வேல்மாறன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் ஆனந்தி, உதவி பொது மேலாளர்கள் விஜயகுமார், கணபதி, இளங்கோவன், கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
==========