இந்திய கடலோர காவல் படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் மத்திய- மாநில அரசுகளுக்கு தெற்காசிய மீனவர் தோழமை மனு
இந்திய கடலோர காவல் படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தெற்காசிய மீனவர் தோழமை மனு அனுப்பியுள்ளது.
நாகர்கோவில்:
இந்திய கடலோர காவல் படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தெற்காசிய மீனவர் தோழமை மனு அனுப்பியுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில் தெற்கு எழுத்தாளர் சங்க நிறுவனர் திருத்தமிழ் தேவனார், தெற்காசிய மீனவர் தோழமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திபோரிஸ், நில உரிமை மீட்புக்குழு உறுப்பினர் போஸ் மற்றும் பல்வேறு மீனவ அமைப்பினர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் மூலமாக தமிழக முதல்-அமைச்சருக்கும், மத்திய வெளி உறவுத்துறை மந்திரிக்கும் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் புத்தளம் மாவட்டம் கல்பட்டி கண்டல்குழியா மீனவ கிராமத்தை சேர்ந்த ரணில் ஷர்மா (வயது 31), சேகன் ஸ்ரீவான் (24), உத்தாரா கசூன் (27), சஞ்சீவா (30), சங்கல்ப ஜீவானந்தா (19), சுதேஷ் சஞ்சீவா (19) ஆகிய ஆறு மீனவர்களும் கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் புத்தளம் மாவட்டம் கல்பட்டி மீனவ கிராமத்தில் இருந்து இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 2 நாட்டுப் படகில் மீன்பிடிப்பதற்காக ஆழ் கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி அதிகாரிகள் ஆறு மீனவர்களை கைது செய்தார்கள்.
வருத்தம்
இந்த மீனவர்கள் விசாரணையின் போது தவறுதலாகத்தான் சிறிய படகில் மீன்பிடித்துக் கொண்டு இந்திய கடலுக்குள் நுழைந்துள்ளார்கள். இவர்களுக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என இவர்களை விசாரித்த அதிகாரிகளும் அறிக்கை வழங்கி இருக்கிறார்கள். அதுபோன்று இவர்கள் மீது தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கிலும் இந்த மீனவர்கள் வேறு எந்த குற்றச்செயல் உள்நோக்கத்துடன் வரவில்லை மீன்பிடிப்பதில் தான் தவறாக கடலுக்குள் வந்திருக்கின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 இலங்கை மீனவர்களும் வேறு எந்த குற்றமும் புரியவில்லை என்று தெரிந்திருந்தும் கடந்த 2 மாதமாக 6 மீனவர்களையும் சென்னை புழல் சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள். இவர்களது 2 சிறிய படகும் தூத்துக்குடியில் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. அப்பாவி மீனவர்களை வேறு ஏதோ குற்றவாளி போன்று சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது படகுகளை சிறை பிடிப்பதும் மீனவ மக்களிடையே மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளன.
விடுவிக்க வேண்டும்
எனவே உடனடியாக 6 மீனவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள அரசு ஆவண செய்ய வேண்டும். நட்பு நாடாகிய இலங்கையோடு கொண்டிருக்கின்ற நட்புறவை நல்லெண்ணத்துடன் மேலும் மேன்மைப்படுத்த இந்த 6 மீனவர்களையும் உடனடியாக விடுவித்து, அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் தமிழக அரசையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.