தமிழகத்தில் 6¼ கோடி வாக்காளர்கள்: தேர்தல் கமிஷன் பட்டியலை வெளியிட்டது


தமிழகத்தில் 6¼ கோடி வாக்காளர்கள்: தேர்தல் கமிஷன் பட்டியலை வெளியிட்டது
x
தினத்தந்தி 6 Jan 2023 5:56 AM IST (Updated: 6 Jan 2023 10:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 6¼ கோடி என்றும், புதிதாக 10 லட்சம் பேர் சேர்ந்து உள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

சென்னை,

1.1.2023 தேதியை வாக்காளராக தகுதிப்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்க இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

அதன்படி, 9.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இறுதி பட்டியல்

பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தவும், இடம் மாற்றம் செய்யவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 8-ந் தேதி வரை பெறப்பட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடைபெற்று வந்தன.

அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

8 லட்சம் பேர் நீக்கம்

தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளன. சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 10 லட்சத்து 54 ஆயிரத்து 566 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 141 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பெயர் நீக்கத்திற்காக 8 லட்சத்து 43 ஆயிரத்து 7 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 136 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவற்றில் முகவரி மாற்றத்திற்காக 5 லட்சத்து 32 ஆயிரத்து 526 பெயர்களும், இறப்பு காரணமாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 664 பெயர்களும், இரட்டை பதிவு தொடர்பாக 21 ஆயிரத்து 946 பெயர்களும் நீக்கப்பட்டன. மேலும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 308 விண்ணப்பங்களின் அடிப்படையில் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள்

இந்த பணிகளின் முடிவில் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 4 லட்சத்து 89 ஆயிரத்து 866 பேர், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 286 பேர், மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர் ஆகும்.

சோழிங்கநல்லூர் பெரிய தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. அந்த தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 66 ஆயிரத்து 295 வாக்காளர்கள் உள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 408 வாக்காளர்கள் உள்ளனர்.

துறைமுகம் சிறிய தொகுதி

குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியான துறைமுகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 70 ஆயிரத்து 125 ஆகும். அதற்கு அடுத்தபடியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 75 ஆயிரத்து 128 ஆகும்.

வெளிநாடுவாழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,310 ஆகும்.

இன்னும் விண்ணப்பிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் இதுவரை 4 லட்சத்து 48 ஆயிரத்து 138 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவின் போது அவர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பெறப்படும். தற்போது 18 முதல் 19 வயதுள்ள 4 லட்சத்து 66 ஆயிரத்து 374 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலை https://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர்ந்து திருத்தப்படும். 1.1.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதி உள்ளவர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் அல்லது www.nvsp.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம் அல்லது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ''Voter Helpline App'' செயலியை தரவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.

சிறப்பு சுருக்கமுறை திருத்த காலம் முடிந்த பிறகு தொடர் திருத்த காலங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள்,அந்தந்த காலாண்டில் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும்.

3.82 கோடி பேரின் ஆதார் இணைப்பு

17 வயது முடிந்திருந்தாலும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் முதல் தேதியில் பரிசீலிக்கப்பட்டு, அந்த விண்ணப்பதாரருக்கு எப்போது 18 வயது பூர்த்தி ஆகிறதோ அந்த காலாண்டில் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படும். அந்த பட்டியல் அவ்வப்போது துணைப் பட்டியலாக வெளியிடப்படும்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி-யை 31.3.2023 வரை விண்ணப்பிக்கலாம். கடந்த 4-ந் தேதிவரை தமிழகத்தில் 3.82 கோடி, அதாவது 61.60 சதவீதம் ஆதார் எண்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்காக சேகரிக்கப்பட்டு உள்ளன.

2 இறுதி வாக்காளர் பட்டியல் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியலின் மென்நகலை (புகைப்படம் இன்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.100 வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம்.

மாவட்ட தொடர்பு மையங்களை வாக்காளர்கள் 1950 (அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி. எண்ணை இணைத்து) மற்றும் 180042521950 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story