6 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு கலைப்பு-பால்வள துணைப்பதிவாளர் தகவல்


6 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு கலைப்பு-பால்வள துணைப்பதிவாளர் தகவல்
x

சேலம் மாவட்டத்தில் 6 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டுள்ளதாக பால்வள துணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம் மாவட்ட பால்வள துணைப்பதிவாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊக்கத்தொகை

சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை 810 ஆகும். இந்த சங்கங்களில் 49 ஆயிரம் உறுப்பினர்களிடம் இருந்து தினமும் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களுக்கு சேலம் "ஆவின்" பால்பண்ணையின் மூலம் 10 நாட்களுக்கு ஒரு முறை ரூ.16½ கோடி மதிப்பில் மற்றும் மாதம் ஒன்றுக்கு ரூ.49½ கோடி மதிப்பில் பால் பணம் தொடக்க சங்கங்களுக்கும், சங்கங்களில் இருந்து உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கும் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

உறுப்பினர்களுக்கு பால் பணம் பட்டுவாடா வழங்கப்படுவதுடன் கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் போனஸ், பங்கு ஈவுத்தொகை மற்றும் ஊக்கத்தொகை போன்ற பணப்பலன்கள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் வழங்கப்பட்டு உள்ளது.

கால்நடை தீவனம்

மேலும் சேலம் பால்பண்ணை மூலமாக உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.3 மானியத்தில் கால்நடை தீவனம், 50 சதவீதம் மானியத்தில் கறவை மாடுகளுக்கு காப்பீடு, பசுந்தீவனம், அசோலா, ஆவின் கால்நடை மருத்துவர்களின் மூலம் உறுப்பினர்களின் இல்லத்திற்கே சென்று கறவை மாடுகளுக்கு மருத்துவ சிகிச்கைகள் அளிக்கப்படுகிறது.

ஆவின் சங்கத்தில் பால் ஊற்றி வரும் உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் போனஸ், ஊக்கத்தொகை மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பால்பண்ணைகளுக்கு ஆவின் சங்கத்தில் உறுப்பினராக இருந்தும் சங்க துணை விதிகளுக்கு முரணாக பால் வழங்கி வருவதை தவிர்த்து ஆவின் சங்கத்திற்கு பால் வழங்க வேண்டும்.

நிர்வாக குழு கலைப்பு

ஏற்கனவே ஆவின் சங்கத்தில் உறுப்பினராக இருந்து தனியார் பால்பண்ணைகளுக்கு பால் வழங்கி வரும் உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சட்டம் மற்றும் துணை விதியின் கீழ் அறிவிப்பு கடிதங்கள் வழங்கப்பட்டு, அவர்களை சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கூட்டுறவு சட்டம் மற்றும் விதி, சங்க துணை விதிகளுக்கு முரணாக சங்கத்தின் நிர்வாகத்தை சரியாக மேலாண்மை செய்யாத, உறுப்பினர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் செயல்பட்டு வந்த 6 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழுவை கலைக்கவும், நிர்வாகக்குழு உறுப்பினர்களை தகுதியின்மை செய்யவும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story