வைகை ஆற்றில் 6 பேர் மூழ்கினர்; ஒருவர் பலி-4 பேர் மீட்பு
சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளித்து கொண்டிருந்த 6 பேர் மூழ்கினர். ஒருவர் பலியானார். 4 பேர் மீட்கப்பட்டனர். மற்றொருவர் கதி என்ன? என்று தெரியவில்லை.
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளித்து கொண்டிருந்த 6 பேர் மூழ்கினர். ஒருவர் பலியானார். 4 பேர் மீட்கப்பட்டனர். மற்றொருவர் கதி என்ன? என்று தெரியவில்லை.
வைகையில் வெள்ளப்பெருக்கு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மதுரை, தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இதை தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
6 பேர் மூழ்கினர்
இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மதுரை திருமங்கலம் அருகே கரடிக்கல் அனுப்பப்பட்டியை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் வினோத்குமார்(வயது 25), அன்பரசன் (25), குன்னனம்பட்டி மாயி (27), மகேஷ்கண்ணன் (25)அனுப்பப்பட்டி கண்ணன் (27) உலுப்பபட்டி பாலசுந்தரம்(26) ஆகிய 6 பேர் சோழவந்தான் அருகே திருவேடகம் பகுதியில் உள்ள வைகையாற்று தடுப்பணை கரையோரத்தில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வைகை ஆற்றில் சிக்கி 6 பேரும் மாயமானார்கள்.
இதில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் அப்பகுதியை சேர்ந்தவர்களால் மீட்கப்பட்டனர். மற்ற 2 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து மேலக்கால் கிராமநிர்வாக அலுவலர் மாசானம் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வினோத், சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார், சோழவந்தான் தீயணைப்பு துறையினர், வாடிப்பட்டி அலுவலர் சதக்கத்துல்லா, சோழவந்தான் போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஒருவர் உடல் மீட்பு
நீண்டநேர தேடுதலுக்குபின் மேலக்கால் வைகை ஆற்றுப்பாலம் அருகில் அன்பரசன் உயிரிழந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் பிணமாக மீட்டனர். மேலும் வினோத்குமாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்று இரவு நேரம் ஆனதால் அவரை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இதனால் ஆற்றில் மூழ்கிய வினோத்குமாரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி இன்று காலை முதல் நடைபெறும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.