தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலி
பேய்க்குளம் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் பலியாகின. மேலும் இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இறந்து போயின.
தட்டார்மடம்:
பேய்க்குளம் அருகே ஆட்டு கொட்டகைக்குள் புகுந்து தெருநாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகளும், 2 குட்டிகளும் பரிதாபமாக பலியாகின.
விவசாயி
தட்டார்மடம் அருகேயுள்ள பேய்குளத்தை சேர்ந்த முத்தையா மகன் முருகன். விவசாயி. இவர் செம்மறி ஆடுகள் வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். ஊருக்கு அருகேயுள்ள வயல்வெளி பகுதியில் தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, பின்னர் மாலையில் வீடு திரும்புவார். இரவில் வீடு அருகேயுள்ள ஆட்டு கொட்டகையில் ஆடுகளையும், குட்டிகளையும் பாதுகாப்பாக அடைத்து வைத்திருப்பார்.
ஆடுகளை கடித்த நாய்கள்
இந்நிலையில் நேற்று அதிகாலையில் சாரல்மழை பெய்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டுக் கொட்டகையில் ஆடுகளின் சத்தம் கேட்டு அங்கு ஓடிச்சென்று பார்த்துள்ளார். ஆட்டுக் கொட்டகையில் 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஆடுகளையும், குட்டிகளையும் கடித்து குதறிக் கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தெருநாய்களை அவர் துரத்திவிட்டு கொட்டகைக்குள் சென்று பார்த்தபோது, 6 ஆடுகளும், 2 குட்டிகளும் ரத்தவெள்ளித்தில் பலியாகி இருந்தன.
10 ஆடுகளுக்கு சிகிச்சை
மேலும் 10 ஆடுகள் நாய்களால் கடிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் சாலைப்புதூர் கால்நடை மருத்துவர் (பொறுப்பு) முகேஷ் அந்த ஆட்டுக் கொட்டைக்கு சென்றார். படுகாயங்களுடன் கிடந்த ஆடுகளுக்கு மருத்துவர் சிகிச்சை அளித்தார். அத்துடன் இறந்த ஆடுகளை அவர் பிரேத பரிசோதனை செய்தார். இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
இப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள் அடிக்கடி ஆடுகளை கடித்து கொன்று வருவதாகவும், இந்த நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதுடன் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஆடுகளுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஆடுகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.