தொடர் மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 வீடுகள் சேதம்


தொடர் மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி

வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவியதால், தமிழ்நாட்டில் கோடை மழை கொட்டியது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த 2-ந்தேதி முதல் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவிலும் கள்ளக்குறிச்சியிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் துருகம் சாலை, காந்தி சாலை, சேலம் சாலை ஆகிய இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

இதேபோல் மாவட்டத்தில் சின்னசேலம், சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கல்வராயன்மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

வீடுகள் சேதம்

இதேபோல் சங்கராபுரம் பகுதியில் பெய்த மழையால் பூட்டை கிராமத்தை சேர்ந்த ராஜ்வீரன் மனைவி சுடர்மணியின் கூரை வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதே போல் அதே கிராமத்தை சேர்ந்த சடையன் மகன் பழனியாப்பிள்ளை வீடு, அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மனைவி பாப்பா என்பவரின் கூரை வீட்டின் மேற்கூரை மற்றும் ஒரு பக்க சுவர், சின்னசேலம் அருகே தாவடிப்பட்டு கிராமத்தில் 3 கூரை வீடுகளும் இடிந்து சேதமடைந்துள்ளன.

மின்னல் தாக்கி மாடுகள் செத்தன

இதேபோல் மின்னல் தாக்கியதில் சங்கராபுரம் அருகே ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த சென்னன் மகன் முத்துசாமிக்கு சொந்தமான 2 கன்றுகுட்டிகள், கரையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் ரஜினி என்பவரின் பசு மாடும் மின்னல் தாக்கி செத்தது. மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் 2 பசுமாடு, உளுந்தூர்பேட்டை பகுதியில் 2 கன்று குட்டிகளும் மின்னல் தாக்கி செத்தன.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வடசிறுவள்ளூரில் 97 மில்லி மீட்டர் குறைந்த பட்சமாக கீழ்பாடியில் 7 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.


Next Story