கடலூர் துறைமுகம் அருகே கடற்கரையில் கிடந்த ரூ.6 லட்சம் கஞ்சா பொட்டலங்கள் போலீசார் கைப்பற்றி விசாரணை
கடலூர் துறைமுகம் அருகே கடற்கரையோரம் கேட்பாரற்று கிடந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் கஞ்சா பொட்டலங்களை வீசி சென்ற நபர்கள் யார்? என விசாரித்து வருகிறார்கள்.
கடலூர் முதுநகர்,
கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டைகள்
கடலூர் துறைமுகம் அருகே தம்மனாம்பேட்டை கடற்கரையோரம் நேற்று அதிகாலை 2 சாக்கு மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. இதைபார்த்த அக்கிராம மக்கள் இதுபற்றி கடலூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும், கடலூர் துறைமுகம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் துறைமுகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் மொத்தம் 28 பொட்டலங்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலா ஒவ்வொரு பொட்டலத்திலும் 2 கிலோ வீதம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து கேட்பாரற்று கிடந்த கஞ்சா பொட்டலங்கள் அனைத்தையும் கடலூர் துறைமுகம் போலீசார் கைப்பற்றினர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்த 2 சாக்கு மூட்டைகளும் கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியதா? அல்லது யாரேனும் கடற்கரையோரம் கஞ்சா மூட்டைகளை வீசி விட்டு சென்றார்களா? அவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் துறைமுகம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.