ரூ.6 லட்சம் கடன் பெற்று காசோலை மோசடி: ஜவுளி வியாபாரிக்கு 3 மாதம் ஜெயில்; ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு


ரூ.6 லட்சம் கடன் பெற்று காசோலை மோசடி:  ஜவுளி வியாபாரிக்கு 3 மாதம் ஜெயில்;  ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு
x

ரூ.6 லட்சம் கடன் பெற்று காசோலை மோசடி செய்த ஜவுளி வியாபாரிக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு விரைவு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஈரோடு

ரூ.6 லட்சம் கடன் பெற்று காசோலை மோசடி செய்த ஜவுளி வியாபாரிக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு விரைவு கோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.6 லட்சம் கடன்

ஈரோடு திண்டல் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 44) இவர், ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் 6 பேருடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் ஈரோடு குமாரசாமி தெருவை சேர்ந்த ஜவுளி வியாபாரி பரணிதரன் (31) என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி 24 சதவீத வட்டிக்கு ரூ.5 லட்சம் கடன் பெற்றார்.

அதைத்தொடர்ந்து அதே வட்டியில் மீண்டும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகைக்கு தனித்தனியாக 2 காசோலையை நிதி நிறுவனத்தில் வழங்கியுள்ளார். அந்த காசோலையில் பணம் இல்லாததால் திரும்பியது. இதையடுத்து பரணிதரன், அவரது சூழ்நிலையை கூறி உரிய வட்டி மற்றும் அபராத தொகையுடன் ரூ.7 லட்சத்து 8 ஆயிரம் தருவதாக கால அவகாசம் கேட்டுள்ளார்.

3 மாதம் ஜெயில்

இதையடுத்து பரணிதரன் கடன் தொகை முழுவதையும் அபராத தொகையுடன் செலுத்துவதற்காக மீண்டும் ஒரு காசோலை வழங்கியுள்ளார். அதுவும் பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் நிதி நிறுவன உரிமையாளர் ஈரோடு விரைவு கோர்ட்டு எண் ஒன்றில், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கின் விசாரணை முடிந்து ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முனிக்குமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், காசோலை மோசடி செய்த பரணிதரனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், காசோலை தொகையான ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்தினை 3 மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லா விட்டால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் மாஜிஸ்திரேட் தீர்ப்பின்போது கூறினார்.


Next Story