கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 6 லட்சம் பேர் விண்ணப்பம்: வீடு, வீடாக கள ஆய்வு செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 6 லட்சம் பேர் விண்ணப்பம்: வீடு, வீடாக கள ஆய்வு செய்யும் பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 31 Aug 2023 12:15 AM IST (Updated: 31 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 6 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்த நிலையில், அவர்களின் வீடு, வீடாக சென்று அலுவலர்கள் கள ஆய்வு செய்து வருகின்றனர். இதை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன் பெற 2 கட்டங்களாக விண்ணப்ப பதிவு முகாம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் மூலம் 3 லட்சத்து 65 ஆயிரத்து 747 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வாயிலாக 2 லட்சத்து 20 ஆயிரத்து 378 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதன்பிறகு நடந்த சிறப்பு முகாமில் 22 ஆயிரத்து 737 பேர் விண்ணப்பம் அளித்தனர். ஆக மொத்தம் 6 லட்சத்து 8 ஆயிரத்து 862 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கள சரிபார்ப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, சரிபார்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்ட அளவில் சிறப்பு சரிபார்ப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இதன்படி கடலூரில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று சரிபார்ப்பு அலுவலர்கள் கள ஆய்வு செய்து வருகின்றனர். இதை மஞ்சக்குப்பம், ராதாகிருஷ்ணன் நகர், புதுக்குப்பம், பாரதிதாசன் நகர், துக்காராம் சந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சரியான விவரங்களை சேகரித்து விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தினார்.


Next Story