விருதுநகர் உதவி இயக்குனரிடம் ரூ.6½ லட்சம் சிக்கியது


விருதுநகர் உதவி இயக்குனரிடம் ரூ.6½ லட்சம் சிக்கியது
x

விருதுநகர் உதவி இயக்குனரிடம் ரூ.6½ லட்சம் சிக்கியது

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனரிடமிருந்து தீபாவளி வசூல் ரூ.6 லட்சத்து 68 ஆயிரத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்

உதவி இயக்குனர்

விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனராக பணியாற்றுபவர் உமாசங்கர்(வயது 53). இவர் தீபாவளி வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று மாலை 6.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

இன்று அரசு விடுமுறை என்பதால் அவரது சொந்த ஊரான நெல்லைக்கு உமாசங்கர் புறப்படுவதை அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கு உமா சங்கர் ஒரு பையுடன் அவரது அறையில் இருந்து வெளியே வந்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை சுற்றி வளைத்து அவரிடம் இருந்த பையை கைப்பற்றி சோதனை நடத்தினர்.

கட்டு கட்டாக பணம்

அந்த பையில் ரூ.6 லட்சத்து 68 ஆயிரம் கட்டு கட்டாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி இயக்குனர் உமா சங்கர் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை அவரது அறைக்குள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவருடன் அவரது அலுவலக உதவியாளர் சஹேயுவும் உடனிருந்தார். அவரது வாகன ஓட்டுநர் நாகராஜ் வெளியே வாகனத்தில் காத்திருந்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி இயக்குனர் உமா சங்கரிடம் அவர் வைத்திருந்த பணத்திற்கு முகாந்திரம் கேட்டனர். ஆனால் அவரால் சரிவர பதில் சொல்ல இயலாத நிலையில் விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது.

விசாரணை முடிவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் அதிகாரி ஒருவரிடம் கட்டு கட்டாக தீபாவளி இனாம் பணம் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இதே மாவட்ட உதவி பஞ்சாயத்து இயக்குனர் அலுவலகத்தில் அப்போது இருந்த அதிகாரி ஒருவர் தீபாவளி இனாம் வசூலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம், சிவகங்கையில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வு குழு அலுவலர் முருகன், டி.எஸ்.பி. எக்டர் தங்கராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் உள்பட 20 பேரிடம் ரூ.57 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிலரிடம் கணக்கில் காட்டப்படாத பணம் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.45 ஆயிரம் சிக்கியது

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஊராட்சிகளின் பொறியியல் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவில் நேற்று மாலையில் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ, தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா முகமது, மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.45 ஆயிரத்தை கைப்பற்றினார்கள்.

பேரையூர் தாலுகா அலுவலகம்

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர்கள் சூரியகலா, அம்புரோஸ், குமரகுரு மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் தாசில்தார் ரவி பயன்படுத்தும் ஜீப்பில் இருந்து ரூ.32,500 மற்றும் அலுவலக பீரோ அருகில் ரூ.15 ஆயிரம் மற்றும் அங்குள்ள புத்தகத்தின் நடுவே ரூ.6 ஆயிரம் மற்றும் 5 பேர் வைத்திருந்த கணக்கில் வராத பணம் என ரூ.64 ஆயிரத்து 500-ஐ லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பேரையூர் தாசில்தார் ரவியிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.


Next Story