வீடு புகுந்து 6 மாத குழந்தை கடத்தல்-பெண்கள் உள்பட 3 பேர் கைது


வீடு புகுந்து 6 மாத குழந்தை கடத்தல்-பெண்கள் உள்பட 3 பேர் கைது
x

முக்கூடல் அருகே, வீடு புகுந்து 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் அருகே, வீடு புகுந்து 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள கீழபாப்பாக்குடி வேத கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இசக்கியம்மாள். இந்த தம்பதிக்கு பிரியங்கா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது.

கடந்த 19-ந்தேதி இரவு வீட்டில் குழந்தையுடன் இசக்கியம்மாள் தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை கடத்தப்பட்டதா? என்று விசாரணை நடத்தினர்.

கைது

மேலும், குழந்தை கடத்தலில் துப்புதுலக்க அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, குழந்தையை கடத்திச்சென்றவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக கீழபாப்பாக்குடி முருகன் மனைவி கனியம்மாள் (வயது 57), ஜெகன் மனைவி முத்துசெல்வி (30), ஆலங்குளத்தை சேர்ந்த கார்த்திகேயன் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும், குழந்தையை கடத்தி விற்க முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மீட்கப்பட்டது எப்படி?

கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது எப்படி? என்பது குறித்து அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 20-ந்தேதி குழந்தையை காணவில்லை என்று இசக்கியம்மாள் புகார் அளித்தார். உடனே போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் உதவியுடன் போலீசார் துப்பு துலக்கினார்கள். புகார் அளித்த 36 மணி நேரத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது. குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக கனியம்மாள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பரபரப்பு

சம்பவத்தன்று கனியம்மாள், முத்துசெல்வி ஆகியோர் இசக்கியம்மாள் வீட்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் கார்த்திகேயன், குழந்தையை விற்க முயன்றுள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்கு அறிமுகமானவர்களிடம் கொடுத்தாலும் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீடு புகுந்து கைக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story