சமையல்காரருக்கு 6 ஆண்டுகளாக ஊதியம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 6 மாதம் சிறை தண்டனை
சமையல்காரருக்கு 6 ஆண்டுகளாக ஊதியம் வழங்காத சிறப்பு தாசில்தாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையல்காரராக மூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தனது ஊதியத்தை வழங்குமாறு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மூர்திக்கு ஊதியம் வழங்குமாறு கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
அவமதிப்பு வழக்கு
ஆனால், அந்த உத்தரவை சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலவாரிய அதிகாரி அமல்படுத்தவில்லை. இதையடுத்து, மூர்த்தி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி மற்றும் சிறப்பு தாசில்தார் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் நல அதிகாரி தாக்கல் செய்த பதில் மனுவில், மூர்த்தி தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு மாவட்ட முன்னாள் ஆதிதிராவிடர் நலவாரிய அதிகாரி வேலை வழங்கியுள்ளார். கலெக்டரிடம் மூர்த்தி வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 2018-ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.
வழங்க வேண்டும்
இந்த விவகாரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவில், மூர்த்திக்கு ஊதிய பாக்கி அனைத்தையும் வழங்குமாறு கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட ஆதி திராவிடர் நல சிறப்பு தாசில்தார் பாக்கி ஊதியத்தை மூர்த்திக்கு வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதி திராவிடர் நல வாரிய அதிகாரி உத்தரவிட்டார்.
ஆனால், அந்த உத்தரவையும் சிறப்பு தாசில்தார் அமல்படுத்தவில்லை. அதே நேரத்தில் ஊதிய தொகையை வழங்கிவிட்டதாக ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
அவகாசம்
அதன் அடிப்படையில் மூர்த்தி தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவருக்கு ஊதிய பாக்கி தொகையை வழங்கவில்லை. இது தொடர்பான விசாரணையில் தொடர்ந்து வாய்தா கேட்கப்பட்டது.
வழக்கு மீண்டும் 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, 3 வாரங்களில் ஊதிய பாக்கி தொகையை வழங்குவதாக அவகாசம் கேட்டார். அதனால், வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னரும், தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தவில்லை.
இடமாற்றம்
அதனால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆஜராகுமாறு சிறப்பு தாசில்தாருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தான் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக சிறப்பு தாசில்தார் தெரிவித்தார்.
ஐகோர்ட்டு உத்தரவுக்கு பிறகு ஒரு ஆண்டுகாலம் அவர் சேலம் சிறப்பு தாசில்தாரராகவே பணியாற்றி உள்ளார். மனுதாரருக்கு ஒரு ரூபாய் கூட வழங்க சிறப்பு தாசில்தார் முயற்சி செய்யவில்லை. எனவே, அவரது வாதத்தை ஏற்க முடியாது.
சிறை தண்டனை
பாதிக்கப்பட்டவருக்கு ஊதியம் வழங்காமல் இருந்தால் அவரது வாழ்வாதாரம் என்னாவாகும்?. அவரது குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப செலவை எப்படி சமாளிப்பார்? அதிகாரியின் செயல், அரசியலமைப்பு சட்டத்தில் தரப்பட்டுள்ள வாழ்வாதார உரிமைக்கு எதிரானது.
சிறப்பு தாசில்தார் தனது தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்க முடியாது. எனவே, கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சிறப்பு தாசில்தார் ஜாஹீர் உசேனுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
குற்ற நடவடிக்கை
உடனடியாக அவர் ஐகோர்ட்டு ஜுடீசியல் பதிவாளர் முன்பு ஆஜராக வேண்டும். அவர் மீது பதிவாளர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஐகோர்ட்டுக்கு தவறான தகவல்களை தந்த சிறப்பு தாசில்தார் மீது ஐகோர்ட்டு பதிவாளர் குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.