தராசுகளில் போலி முத்திரை பதித்த வியாபாரிக்கு 6 மாதம் ஜெயில்
தராசுகளில் போலி முத்திரை பதித்த வியாபாரிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
மதுரை கீழமாசிவீதியில் உள்ள தராசு விற்பனை செய்யும் கடையில் தொழிலாளர் துறையினர் கடந்த 2019-ம் ஆண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தராசுகளில் முத்திரையிட பயன்படுத்தப்படும் உளி உள்ளிட்ட பொருள்கள் மூலம் போலியாக தராசுகள், படிக்கற்களுக்கு முத்திரையிடுவது, முத்திரையிடாத தராசுகள் விற்பனை செய்வது ஆகியன கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்த நிறுவன உரிமையாளர் மீது மதுரை மாவட்ட கோர்ட்டில் தொழிலாளர் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மதுரை கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பு வக்கீல் காளீஸ்வரி ஆஜரானார். இதற்கிடையே, வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தராசு விற்பனை செய்யும் கடை வியாபாரிக்கு 6 மாத சிறை தண்டனை, ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு ராஜா மகேஷ் தீர்ப்பளித்தார்.