பாம்பு கடித்து 6 மாத கர்ப்பிணி பலி


பாம்பு கடித்து 6 மாத கர்ப்பிணி பலி
x

அன்னவாசல் அருகே தந்தை வீட்டிற்கு வந்த போது, பாம்பு கடித்து 6 மாத கர்ப்பிணி இறந்தார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டை

கர்ப்பிணி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி ராதிகா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த ராதிகா அன்னவாசல் அருகே உள்ள நல்லம்மாள்சத்திரத்தில் இருக்கும் தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு பின்புறம் உள்ள கொள்ளை பகுதிக்கு சென்றபோது அவரை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த ராதிகாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அன்னவாசல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

பின்னர் ராதிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராதிகாவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி விசாரணை நடத்தி வருகிறார். தந்தை வீட்டிற்கு வந்த கர்ப்பிணி பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story