கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய 6 பேர் கைது
சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம்:
சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடமுழுக்கு விழா
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழா இன்று(புதன்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டினர்
இந்த நிலையில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று மாலை 4 மணி அளவில் கொள்ளிடம் அருகே உள்ள அரசூர் ரவுண்டானா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மயிலாடுதுறை நகர செயலாளர் விஜய், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், அசோகன், கேசவன் ஆகியோர் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டியதுடன் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
6 பேர் கைது
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கருப்புக்கொடி காட்டிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.