பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள வடவேற்குடி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 29). இவர் வடபாதிமங்கலத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆர்டர் தொடர்பாக வர வேண்டிய பணம் சம்பந்தமாக மகேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், திட்டச்சேரி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் மகேந்திரன் சென்றபோது, அவரை வழிமறித்து சிவபாலன் மற்றும் இளமங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அருண்பிரபு (20) உள்பட 4 பேர் அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பிரபு, சிவபாலன் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்டூடியோ உரிமையாளர் மகேந்திரனின் நண்பர்கள் வடவேற்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25), அமீத் (20), ராஜசேகர் (29), ஆசைத்தம்பி (34), புள்ளமங்கலம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் (35), செந்தில்குமார் (43) ஆகிய 6 பேரும் ஒரு காரில் சென்று, ஜாமீனில் வெளியே வந்த அருண்பிரபு வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். அவர்களை அருண்பிரபுவின் தாய் அனுராதா (45) தட்டிக்கேட்டுள்ளார். அவரை 6 பேரும் திட்டி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசில் அருண்பிரபு கொடுத்த புகாரின்பேரில் விக்னேஷ், அமீத் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.