ரவுடியை கொன்ற 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது


ரவுடியை கொன்ற 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
x

கடலூரில் பிரபல ரவுடியை பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்த 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் கருப்பு என்கிற கண்ணன் (வயது 26). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை கண்ணன் கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ். வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், கண்ணனை அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்தனர்.

இதை தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த பூச்சி என்கிற மூர்த்தி (22), வன்னியர்பாளையம் ரேவந்த் (25) ஆகியோரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், பலியான கண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பழிக்குப்பழி

தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 2020-ம் ஆண்டு எம்.புதூர் புதுநகர் பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் காமராஜ் (25) என்பவரை கண்ணன் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்துள்ளார். இதனால் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்ய காமராஜின் தம்பியான 17 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் சதித்திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் வெளியூரில் வேலை செய்து விட்டு, ஒரு துக்க நிகழ்ச்சிக்காக கண்ணன் கடலூர் வந்ததை நோட்டமிட்ட காமராஜின் தம்பி தனது அக்கா கணவர் எம்.புதூரை சேர்ந்த வேலு மகன் சந்திரசேகர் (24), நண்பர்களான சிவா மகன் எலி என்கிற விக்னேஷ் (19) மற்றும் மற்றொரு 17 வயது சிறுவன், ராஜசேகர் மகன் ராகுல்ராஜ் (21), வெங்கடேசன் மகன் தனுஷ்(20) ஆகிய 6 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

6 பேர் கைது

இதையடுத்து சென்னைக்கு தப்பிச் சென்ற 6 பேரையும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் தலைமையில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இ்ன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, கதிரவன் மற்றும் போலீசார் பிடித்து வந்தனர். தொடர்ந்து அவர்கள், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்திலும் காமராஜ் கொலைக்கு பழிக்கு பழிவாங்க கண்ணனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். ராகுல்ராஜ், தனுஷ் ஆகிய 2 பேரும் கண்ணன் நடமாட்டத்தை கண்காணித்து, 17 வயது சிறுவனிடம் சொன்னதாகவும், மற்ற 4 பேரும் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story