கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி
பூண்டி மாதா பேராலயத்துக்கு ஆன்மிக பயணமாக வந்த சகோதாரர்கள் 3 பேர் உள்பட 6 பேர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றாகும். 'பசிலிக்கா' அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். காலாண்டு தேர்வு முடிந்ததை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் கடந்த சில நாட்களாக பூண்டி மாதா பேராலயத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் ஆன்மிக சுற்றுலாவாக வந்த வண்ணம் உள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் குளித்தனர்
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் (வயது 38), அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ்(36), தாவிதுராஜ்(30) ஆகியோர் உள்பட 57 பேரை கொண்ட குழுவினர் பூண்டி மாதா பேராலயத்துக்கு நேற்று ஒரு பஸ்சில் ஆன்மிக சுற்றுலாவாக வந்தனர். இவர்கள் நேற்று காலை பூண்டி மாதா பேராலயம் அருகில் உள்ள கொள்ளிடம் செங்கரையூர் பாலம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். ஆற்றில் நீரோட்டம் இருந்த நிலையில் ஆற்றில் இறங்கி குளித்தவர்கள் அதன் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். அப்போது சார்லஸ், அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ், தாவிதுராஜ் ஆகியோர் உள்பட 6 பேர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர்.
6 பேர் ஆற்றில் மூழ்கினர்
இதை அந்த வழியாக வந்த மாட்டு வண்டி உரிமையாளர் செல்வம் என்பவர் பார்த்து உடனடியாக ஆற்றில் குதித்து தத்தளித்தவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் 6 பேரும் ஆற்றில் மூழ்கி மாயமாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அதிகாரி முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சகோதரர்கள் உள்பட 4 பேர் உடல்கள் மீட்பு
இதில் சார்லஸ், அவருடைய தம்பி பிரதிவ்ராஜ் ஆகியோர் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து மாயமான மற்ற நபர்களையும் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் தேடினர். தீவிர தேடுதலுக்கு பின்னர் மதியம் 2.15 மணி அளவில் சகோதரர்களின் ஒருவரான தாவிதுராஜ் என்பவரும் மாலை 3.30 மணி அளவில் பிரவீன்ராஜ்(19) என்பவரும் பிணமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து மற்ற 2 பேருடைய உடல்களையும் ேதடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கலெக்டர் ஆய்வு
மீட்பு பணிகளை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பலியானவர்களின் உறவினர்களுக்கு கலெக்டர் ஆறுதல் கூறினர். தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா, பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், தாசில்தார் பெர்ஷியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா, திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் மீட்பு பணியின்போது உடன் இருந்தனர்.
பேராலய அதிபர் ஆறுதல்
மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடன் வந்தவர்கள் ஆற்றில் மூழ்கி பலியானதால் சோகத்தில் இருந்த தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
உறவுகளை தவிக்க விட்ட சகோதரர்கள்
ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சார்லசுக்கு ஜெயவனிதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரதிவ்ராஜுக்கு தலால்ரோஷிலி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். தாவிதுராஜுக்கு லூர்து மேரி என்ற மனைவியும் 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். உயிரிழந்த 3 பேரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர். சுற்றுலா வந்த இடத்தில் சகோதரர்கள் உள்பட 6 பேரும் ஆற்றில் மூழ்கி மாயமானபோது உடன் வந்த உறவினர்கள் பரிதவித்தபடி ஆற்றங்கரையில் கதறி அழுது கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்தனர். மூழ்கியவர்கள் மீண்டு வருவார்களா? என அவர்கள் பதைபதைப்புடன் எதிர்பார்த்து ஆற்றங்கரையில் காத்திருந்த காட்சி அங்கு இருந்தவர்களையும் கண்ணீர் விட செய்தது.
சோகத்தில் முடிந்த சுற்றுலா பயணம்
பூண்டி மாதா கோவிலை பார்த்து விட்டு வேளாங்கண்ணி சென்று அங்கு 2 நாட்கள் தங்கி இருந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிச்செல்ல சுற்றுலா குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியானதால் அவர்களுடைய சுற்றுலா பயணம் சோகத்தில் முடிந்தது. சுற்றுலா வந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.