முயல் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம்
நாங்குநேரி அருகே முயல் வேட்டையாடிய 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள தாழைகுளத்தில் ஒரு கும்பல் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகரன், வனவர் செல்வசிவா மற்றும் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது முயல்களை நாய்கள் மூலம் வேட்டையாடி கொண்டிருந்த கும்பல் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓடியது. இருப்பினும் வனத்துறையினர் 6 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணகுடி அருகே உள்ள கடம்பன் குளத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பத்ர செல்வன் (வயது 30), நாராயணன் மகன் முத்துக்குமார் (27), செம்பாட்டை சேர்ந்த சார்லஸ் மகன் செல்வின் மைக்கேல் பிரதீப் (33), கிருஷ்ணன் மகன் பாலராகவன் (31), அழகப்பபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் ஸ்ரீராம் (27), சந்திரன் மகன் சுமன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 6 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது மேலும் தப்பி ஓடிய 14 பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.