ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டை சாலையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர்
தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டை சாலையில், சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வாகனத்தில் சென்றனர்.அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 22), வல்லத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (19), கிஷோர் (29), மேலூரை சேர்ந்த முரளிதரன் (19), மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது.
6 பேர் கைது
மேலும் அவர்களிடம் சோதனை செய்த போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட 6 பேரும் ஏதாவது அசம்பாவித சம்பவம் நடத்துவதற்காக அரிவாளுடன் சுற்றி திரிந்தனரா? அல்லது வழிப்பறியில் ஈடுபட்டார்களாக என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.