4 பெண்கள் உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு


4 பெண்கள் உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூா் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்று வீசுவதுடன், பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால், தற்போது அதில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. மேலும் பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்கிறது. இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மாவட்டத்தில் பெரும்பாலானோர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளிக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கிடையே தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பும் வேகமெடுத்துள்ளது.

6 பேர் பாதிப்பு

கடலூர் வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 பெண்களும், நெய்வேலி, முட்டத்தை சேர்ந்த 2 ஆண்களும், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்களும் என மொத்தம் 6 பேர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர்.

இதற்காக அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் அவர்கள் 6 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியானதில் 6 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனி வார்டில் சிகிச்சை

இதையடுத்து அவர்கள் 6 பேரும் டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதை தவிர்க்க டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--


Next Story