லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணிநீக்கம்


லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பணிநீக்கம்
x

நாட்டறம்பள்ளியில் லாரி திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசாரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பத்தூர்

லாரியை கடத்தி விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூரை சேர்ந்தவர் முரளி. இவருக்கு சொந்தமான லாரியில் கடந்த 2015-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மோட்டார் சைக்கிள் வாகனத்திற்கான உதிரிப்பாகங்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்றது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே சென்றபோது, காரில் வந்த 6 பேர் கும்பல் லாரியை வழி மடக்கினர்.

பின்னர் டிரைவரை கீழேதள்ளிவிட்டு ஆந்திராவுக்கு லாரியை கடத்தி சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து லாரி உரிமையாளர் முரளி நாட்டறம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஜார்தான்கொல்லை பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவரை கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கியதாக கைது

அப்போது ராஜசேகரன் கடத்திய லாரியை உடைத்து விற்று விட்டதாகவும், அதற்கு உண்டான பணத்தை தான் செலுத்தி விடுவதாகவும் கூறினார். அதன்படி ரூ.12 லட்சம் கொடுப்பதாக உறுதியளித்து முதல் தவணையாக ரூ.7 லட்சம் கொடுத்தார். அந்த பணத்தை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்காமல் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மீதம் உள்ள பணத்தை கொடுக்க போலீசார் வற்புறுத்தியதை அடுத்து ராஜசேகரன் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சோதனை செய்து கணக்கில் வராத ரூ.7 லட்சத்தை கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்- இன்ஸ்பெக்டர் சேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

6 பேர் பணி நீக்கம்

இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் 4 போலீசார் என 6 பேரை பணி நீக்கம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக குற்றவாளியை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்ததாகவும், அதற்கான பதிவேட்டில் குற்றவாளி குறித்து எதுவும் குறிப்பிடாமல் இருந்ததால் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் குற்றப்பிரிவு தலைமைக்காவலர் நாசர் (தற்போது ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறார்), கார்த்திக் (வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையம்), அறிவுச்செல்வம் (வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையம்), ரகுராம் (ஜோலார்பேட்டை) ஆகிய 6 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story