நடுக்கடலில் படகில் வைத்து கடல் அட்டையை அவித்த 6 பேர் சிக்கினர்


நடுக்கடலில் படகில் வைத்து கடல் அட்டையை அவித்த 6 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் வைத்து கடல் அட்டையை அவித்து பதப்படுத்திய 6 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் வைத்து கடல் அட்டையை அவித்து பதப்படுத்திய 6 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடல் அட்டை கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடல் அட்டை அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இருப்பதால், கடல் அட்டை பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த தடை செய்யப்பட்ட கடல் அட்டையை மருந்து தயாரிப்பதற்காக தொடர்ந்து சிலர் கடத்தி வருகின்றனர். இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் மனிஷ், லேக்ராஜ் மீனா ஆகியோர் தலைமையில் சுங்கத்துறையினர் கடலில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது திரேஸ்புரத்தில் இருந்து சுமார் 3 கடல்மைல் தொலைவில் ஒரு படகு நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த படகை சோதனை செய்தனர். அந்த படகில் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை அவித்து உப்பு போட்டு பதப்படுத்திக் கொண்டு இருப்பது தெரியவந்தது.

கடல் அட்டை பறிமுதல்

இதனை தொடர்ந்து சுங்கத்துறையினர், படகில் இருந்த தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த அந்தோணி (வயது 48), கெபிஸ்டன் (32), சிக்காலி காகன் (46), பாத்திமாநகரை சேர்ந்த முத்தையா, கரோல் (29), குரூஸ்புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி (58) ஆகிய 6 பேரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், நடுக்கடலில் வைத்து மீன்பிடி படகுகளில் இருந்து கடல் அட்டையை சேகரித்து உள்ளனர். கரையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால், படகில் வைத்தே அவித்து கரைக்கு கொண்டு வந்து காய வைத்து வெளிநாட்டுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 31 பைகளில் தலா 20 கிலோ வீதம் வைக்கப்பட்டு இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 610 கிலோ கடல் அட்டை மற்றும் படகையும் பறிமுதல் செய்தனர்.


Next Story