பெண் ஜோசியரிடம் 6 பவுன் நகை நூதன திருட்டு
பெண் ஜோசியரிடம் 6 பவுன் நகையை நூதன முறையில் திருடி சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண் ஜோசியரிடம் 6 பவுன் நகையை நூதன முறையில் திருடி சென்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜோசியர்
சோமரசம்பேட்டையை அடுத்த அகவத்தூர் சக்திநகரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 52). இவர் ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி பழனிமலை முருகன் கோவிலுக்கு சென்று வீட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருடன் பயணித்த பெண் ஒருவர் நைசாக பேச்சு கொடுத்து அவர் தனக்கு ஜோசியம் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அதனை நம்பிய பாக்கியலட்சுமி அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது அந்த பெண் பாக்கியலட்சுமிக்கு டீ போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது அந்த டீயை அருந்திய அவர் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார். மறுநாள் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 6 பவுன் சங்கிலிகளை காணவில்லை.
நூதன திருட்டு
மேலும் அந்த பெண்ணையும் காணவில்லை. டீயில் மயக்க பொடியை கலந்து கொடுத்து விட்டு தங்க சங்கிலிகளை நூதன முறையில் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாக்கியலட்சுமி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
* திருச்சி கூனிபஜார் பகுதியில் கஞ்சாவிற்றதாக பீமநகர் பகுதியை சேர்ந்த வீரமணி (32) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பாதுகாப்பு கேட்டு மனு
* திருச்சி மன்னார்புரம் பகுதியில் செயல்பட்டு வந்த எல்பின் என்ற நிதிநிறுவனத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர். இங்கு முகவர்களாக ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் பொதுமக்களிடம் நிதியை பெற்று நிறுவனத்தில் ஒப்படைத்து வந்தனர். இந்தநிலையில் இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. இந்தநிலையில் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்த முகவர்கள் பலர், நேற்று திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி மனு கொடுத்தனர்.
கல்லூரி மாணவி மாயம்
*திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டயம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகள் பிரதீபா (17). இவர் தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று காலை கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற அவர், கல்லூரிக்கும் செல்லவில்லை. வீட்டுக்கும் திரும்ப வரவில்லை. அக்கம்பக்கத்திலும், உறவினர் வீடுகளிலும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவருடைய தந்தை இதுபற்றி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
பணம் திருடிய 3 பெண்கள் கைது
*திருச்சி செம்பட்டு புதுதெருவை சேர்ந்தவர் பாலாஜி (37). இவர் தனது நண்பர்களுடன் டவுன் பஸ்சில் மத்திய பஸ்நிலையத்துக்கு வந்தார். அப்போது, அவர் பஸ்சில் இருந்து இறங்கும்போது, 3 பெண்கள் அவர் துணிப்பையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடியுள்ளனர். இதைப்பார்த்த பாலாஜியின் நண்பர்கள், 3 பெண்களையும் பிடித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் பகுதியை சேர்ந்த முரளி மனைவி ஜமுனா (43), முருகன் மனைவி ராணி (45), சீனிவாசன் மனைவி லட்சுமி (55) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 11-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாட்டு வண்டியில் மணல் கடத்தல்
*மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் நேற்று முடிகண்டம் அருகே கோரையாற்று பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மாட்டுவண்டியில் மணல் அள்ளி கடத்தி வந்த மேக்குடிஆலம்பட்டியை சேர்ந்த அந்தோணிசாமி (56) என்பவரை போலீசார் கைது செய்து அரை யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருச்சி ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.