வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு 'சீல்'
காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 6 கடைகளை நகராட்சி அலுவலர்கள் நேற்று சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
நகராட்சி கடை
காங்கயம் பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் கடைகள் உள்ளன. இதில் 6 கடைகளை எடுத்து நடத்தும் வியாபாரிகள் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக வாடகை செலுத்தவில்லை.
இவர்கள் வைத்துள்ள வாடகை நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் ஆகும். இந்த கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் கடையை பூட்டி சீல் வைக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீசு கொடுக்கப்பட்டது. ஆனாலும் கடையை வாடகைக்கு எடுத்த வியாபாரிகள் வாடகை செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது.
சீல் வைப்பு
மேலும் வாடகை செலுத்த வலியுறுத்தி சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களை நகராட்சி ஊழியர்கள் நேரில் சென்றும் அறிவுறுத்தி வந்தனர். இந்த நிலையில் வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியர்கள் நேற்று கடைகளைப் பூட்டி சீல் வைத்து, நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடஷ்வரன் கூறும்போது " நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு, குடிநீர்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளுக்கு இணைப்புகள் துண்டிக்கப்படும்.. எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை உள்ளிட்ட உடனடியாகச் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்கவும் என்றார்.