கீரனூர் பஸ் நிலையம் அருகே 6 கடைகள் எரிந்து நாசம்


கீரனூர் பஸ் நிலையம் அருகே 6 கடைகள் தீவிபத்தில் எரிந்து நாசமானது. நாசவேலை காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கடைகளில் தீவிபத்து

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பஸ் நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இங்கு கமாலுதீன் மளிகை கடையும், அனுமந்த் சீட் கவர் செய்யும் கடையும், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் காய்கறி கடைகளை நடத்தி வந்தனர். இந்த 4 கடைகளிலும் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

நாசவேலை காரணமா?

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதனைக்கண்ட வியாபாரிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவத்துக்கு முன்னதாக நள்ளிரவு 12 மணியளவில் பஸ் நிலையம் வடபுறம் பகுதியில் உள்ள 2 கடைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அந்த கடைகளுக்குள் எந்த பொருட்களும் இல்லை. இந்த சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும், நள்ளிரவில் அடுத்தடுத்து 6 கடைகள் தீப்பிடித்து எரிந்ததால் நாச வேலை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story