தேனீக்கள் கொட்டியதில் 6 மாணவர்கள் காயம்


தேனீக்கள் கொட்டியதில் 6 மாணவர்கள் காயம்
x

எரியோடு அருகே தேனீக்கள் கொட்டியதில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

எரியோடு அருகே உள்ள தண்ணீர்ப்பந்தம்பட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் 2-வது மாடியில் ஆங்கிலத்துறை வகுப்பறையின் வெளியே, மேல்பகுதியில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் ஒருவித அச்சத்தோடு கடந்து சென்று கொண்டிருந்தனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை கல்லூரியில் வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூட்டில் இருந்து தேனீக்கள் கலைந்து வெளியேறின. இதனை கண்ட மாணவ-மாணவிகள் அலறியடித்து ஓடினர். அவர்களை விரட்டி, விரட்டி தேனீக்கள் கொட்டின.

இதில் 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் ராமகிருஷ்ணன் (வயது 17), கண்ணன் (17), சண்முகவேல் (17), மதன் (17), கவுதம் (17), நித்யா (17) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். இதில் ராமகிருஷ்ணன், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அரசு கல்லூரியில் உள்ள தேன்கூட்டை தீயணைப்பு படை வீரர்கள் அழித்தனர்.


Next Story