6 ஆயிரம் அதிநவீன இருதய சிகிச்சைகள்
நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் 6 ஆயிரம் அதிநவீன இருதய சிகிச்சைகள் நடைபெற்றதாக துறைத்தலைவர் தெரிவித்தார்
நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் உலக இதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதயவியல் பிரிவு துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் எட்வின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கண்காட்சி நடைபெற்றது. மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் கண்காட்சியை திறந்து வைத்தார். மேலும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, டீன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சாந்தாராம், மருத்துவ சூப்பிரண்டு பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி சூப்பிரண்டு கந்தசாமி, சிறுநீரகவியல் பிரிவு துறை தலைவர் ராமசுப்பிரமணியன், மருத்துவ பேராசிரியர்கள், டாக்டர்கள் செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துறைத்தலைவர் ரவிச்சந்திரன் எட்வின் பேசுகையில் கூறியதாவது:-
இதய பாதிப்பால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை போலவே, இதய பாதிப்பு ஏற்படுவோரின் வயது குறைந்துள்ளது. குறிப்பாக மாரடைப்பு விகிதம் அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது. இதற்கு முக்கிய 5 காரணங்கள் உள்ளன. முழுமுதல் காரணம், புகைப்பழக்கம். அடுத்து மன அழுத்தம். 3-வதாக, மாறுபட்ட வாழ்க்கை முறை, அதிகப்படியான மாசுக்காற்று, துரித உணவுப்பழக்கம், உடல் உழைப்பு இன்மை போன்றவை இதயத்தை பலவீனமாக்குகின்றன. 4-வதாக சீரற்ற ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், கொலஸ்ட்ரால் அளவு சீரற்று இருப்பது ஆகியவை இதய பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். 5-வதாக மரபு காரணமாக ஏற்படும் இதய பாதிப்புகள்.
நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி எனப்படும் இருதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா? என்பதை பார்க்கும் பரிசோதனை மற்றும் குருதி குழாய் திருத்தம் போன்ற அதிநவீன சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.