சிப்காட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 6 கிராம ஊராட்சிகளை கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சேர்த்து தண்ணீர் வழங்க வேண்டும்; கலெக்டரிடம் தோப்பு வெங்கடாசலம் மனு
சிப்காட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 6 கிராம ஊராட்சிகளுக்கு கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்த்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
சிப்காட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 6 கிராம ஊராட்சிகளுக்கு கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்த்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
கொடிவேரி திட்டம்
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ரூ.234 கோடியில் பெருந்துறை-கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் சென்னிமலை ஒன்றியத்துக்கு 6 கிராம ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என்று கோரி, பொதுமக்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
சிப்காட் கழிவுகள்
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறியதாவது:-
பெருந்துறை-கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.
ஈங்கூர், வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தமபாளையம், சிறுகளஞ்சி, பனியம்பள்ளி ஆகிய 6 கிராம ஊராட்சிகளும் சிப்காட் பகுதியை ஒட்டி உள்ள கிராம ஊராட்சிகளாகும். இங்கு சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கழிவுகள் நிலத்தடி நீரை மாசுப்படுத்தி விட்டன. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி, கால்நடைகள் கூட குடிக்க முடியாத அளவுக்கு விஷ நீராக உள்ளது.
இணைக்க வேண்டும்
எனவே இந்த மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்க இந்த 6 கிராம ஊராட்சிகளையும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இணைக்க வேண்டும். சிப்காட் கழிவு பிரச்சினை என்பது திடீர் என வந்தது அல்ல. தொழிற்சாலைகளில் கட்டாயமாக மறுசுழற்சி சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற சட்டம் வருவதற்கு முன்பே, இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் முழுமையாக நிலத்தடி நீரை பாதித்து விட்டது. எனவே தமிழக முதல்-அமைச்சர் இந்த மக்களுக்காக நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
அத்திக்கடவு-அவினாசி
இதுபோல் அத்திக்கடவு -அவினாசி திட்டத்தில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் உள்ள சுமார் 60 குளம், குட்டைகளை சேர்த்தால், நீர்ச்செறிவு ஏற்பட்டு, நிலத்தடி நீர் தூய்மைப்படுத்தப்படும். பெருந்துறை சந்தையில் கட்டப்படும் வணிக வளாகத்தை மாடி கட்டிடமாக கட்டாமல் தரை தளத்துடன் வசதியாக கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் கலெக்டரிடம் தெரிவித்து இருக்கிறோம்.
கலெக்டரும் துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துஉள்ளார்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினார்.