குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து6 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்கடலூர் அருகே பரபரப்பு


குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து6 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்கடலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6 கிராமங்களை சேர்ந்த மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

கடலூர் அருகே உள்ள வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் கடலூர் மாநகராட்சி சார்பில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையறிந்த அப்பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இங்கு குப்பை கிடங்கு அமைந்தால் விவசாய நிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் என கூறி குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் வெள்ளப்பாக்கம், மருதாடு, வரக்கால்பட்டு, அழகிய நத்தம், இராண்டாயிரம் வளாகம், குமராபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று காலை வெள்ளப்பாக்கம் பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், விவசாயிகள் கூட்டமைப்பினருடன் இணைந்து குப்பை கிடங்கு அமைக்கும் பணியை கைவிட வேண்டும். அரசு விதைப்பண்ணை நிலத்தை மீண்டும் விவசாய பண்ணையாக மாற்ற முன்வர வேண்டும். அரசு விதை பண்ணை நிலம் அருகில் பள்ளிகள் உள்ளதால் மாணவர்களின் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். தென்பெண்ணையாறு அருகே உள்ளதால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு தொடர்ந்து ஏற்படுவதால் மேற்கண்ட திட்ட பணிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திட்டவட்டம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சினை குறித்து கோட்டாட்சியரிடம் பேசி தீர்வு காணலாம். ஆகவே உண்ணாவிரத போராட்டத்தை கை விடக்கோரி வலியுறுத்தினர். அதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், இது தொடர்பாக கோட்டாட்சியர் நேரில் வந்து, குப்பை கிடங்கு அமைக்க மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை

இதையடுத்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு நேரில் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, கிராம மக்கள் குப்பை கிடங்கு அமைக்க மாட்டோம் என எழுத்து பூர்வாக எங்களுக்கு உறுதியளியுங்கள் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கோட்டாட்சியர், இப்பகுதியில் கண்டிப்பாக குப்பை கிடங்கு அமைக்க மாட்டோம் எனவும் இந்த பகுதியில் 600 அடி சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.

இதை கேட்ட பொதுமக்கள் எதற்காக 600 அடி சாலை அமைக்கிறீர்கள் எனவும், மக்கள் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்கள் ஏதேனும் கொண்டு வந்தால் எங்களிடம் முழுமையாக கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

போலீஸ் குவிப்பு

இதையடுத்து 6 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அங்கு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story