விளை நிலங்களுக்குள் புகுந்த 6 காட்டு யானைகள்


விளை நிலங்களுக்குள் புகுந்த 6 காட்டு யானைகள்
x

குடியாத்தம் அருகே விளை நிலங்களுக்குள் 6 காட்டு யானைகள் புகுந்து வாழை, பப்பாளி உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தின.

வேலூர்

யானை கூட்டம்

குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர மாநில எல்லையை ஒட்டியபடி உள்ளது. ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. அந்த யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக வனப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

வனத்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டிவிட்டனர். இதனால் கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை குறைந்திருந்தது, ஆங்காங்கே ஓரிரு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைசேதப்படுத்தி வந்தது.

மரங்களை சேதப்படுத்தின

இந்த நிலையில் ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு 20 யானைகள் கூட்டத்தை ஆந்திர வன ஊழியர்கள் தமிழக வனப்பகுதியை நோக்கி விரட்டியுள்ளனர். அதில் 4 பெரிய யானைகள், 2 குட்டி யானைகள் என 6 யானைகள் கொண்ட கூட்டம் குடியாத்தம் அடுத்த தனகொண்டபல்லி காட்டுப்பகுதியில் முகாமிட்டு இரவு நேரங்களில் வனப் பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தது.

குடியாத்தத்தை அடுத்த மத்தேட்டிபல்லி கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவரது நிலத்தில் புகுந்து 20 வாழை மரங்கள், 15 மா மரங்கள், தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், நூற்றுக்கும் மேற்பட்ட பப்பாளி மரங்களை உடைத்தும் நாசம் செய்துள்ளது. இது குறித்து அதிகாலையில் விவசாயி சங்கரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் உடனடியாக குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபாவிற்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்தனர். யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவத்தால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


Next Story