ரூ.60 லட்சத்தில் இந்திய மருத்துவ கழக புதிய கட்டிடம்
மயிலாடுதுறையில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட இந்திய மருத்துவ கழகத்தின் புதிய கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திறந்து வைத்தார்.
மயிலாடுதுறையில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட இந்திய மருத்துவ கழகத்தின் புதிய கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திறந்து வைத்தார்.
புதிய கட்டிடம்
மயிலாடுதுறை வள்ளாலகரம் பகுதியில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளைக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா மற்றும் மருத்துவர்கள் தின விழா மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. இந்திய மருத்துவ கழகத்தின் மயிலாடுதுறை தலைவர் டாக்டர் பாரதிதாசன் வரவேற்றார். பொருளாளர் டாக்டர் ரத்தின அருண்குமார் பேசினார். இந்திய மருத்துவ கழக கிழக்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் கோவிந்தராஜன் மற்றும் மூத்த டாக்டர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்துகொண்டு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்திய மருத்துவ கழக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கட்டிட கல்வெட்டை திறந்து வைத்தார்.
நினைவு பரிசு
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் டாக்டர்களின் பணியை பாராட்டி பேசினர். தொடர்ந்து மருத்துவத்துறையில் சேவை ஆற்றி வரும் மூத்த டாக்டர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில் சுகாதாரத்துறை, அரசு மருத்துவத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கழக டாக்டர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், ரோட்டரி, அரிமா உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை சங்கங்களை சார்ந்த பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மயிலாடுதுறை கிளை செயலாளர் டாக்டர் சௌமித்யாபானு நன்றி கூறினார். நிகழ்ச்சியை அகஸ்டின் விஜய் தொகுத்து வழங்கினார்.