வெள்ளியங்காடு 60 அடி ரோட்டில் பல மாதமாக ெதாடரும் போக்குவரத்து தடை
திருப்பூர்,மே.11-
திருப்பூர் வெள்ளியங்காடு 60 அடி ரோடு பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பல மாதமாக இங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து தடை
திருப்பூர் வெள்ளியங்காடு 60 அடி ரோடு பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த பல மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் ரோட்டின் ஒரு பகுதியில் பணி நிறைவடைந்துள்ள நிலையில் ரோட்டின் மற்றொரு பகுதியில் பணி இன்னமும் நிறைவடையாமல் உள்ளது. சுமார் 3 மாதத்திற்கும் மேலாக இந்த பணி நடந்து வருகிறது. இதனால் இங்கு நீண்ட காலமாக வாகனப்போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் இருந்து தாராபுரம் ரோட்டிற்கும், தாராபுரம் ரோட்டில் இருந்து திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் ரோட்டிற்கும் செல்லும் ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த ரோடை பயன்படுத்தி வருகின்றனர். திருப்பூரின் வாகனப்போக்குவரத்தில் இதுவும் முக்கியமான ஒரு ரோடாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்லும் நிலையில் இங்கு போக்குவரத்து தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.
வாகன ஓட்டிகள் அவதி
தற்போது ரோட்டின் ஒரு பகுதி வழியாக மட்டும் வாகனங்கள் வந்து சென்றவண்ணம் உள்ளன. குறுகலான ரோட்டில் எதிரும், புதிருமாக அதிக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் அதிகமான வாகனங்கள் செல்வதால் அப்போது வாகன ஓட்டிகள் இங்கு வாகனங்களை ஓட்டி செல்வதற்கு மிகவும் அவதிப்படுகின்றனர். விபத்து ஏற்படுவதற்கான அபயாமும் உள்ளது. இதேபோல், தற்போது பணி நடந்து வரும் சாலையின் ஓரமாக உள்ள வீடு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு இங்கு நீண்ட காலமாக நடக்கும் பணி மிகவும் இடையூறாக உள்ளது. கடைகள், நிறுவனங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும் சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் வரத்து குறைந்துள்ளதால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
பொதுமக்கள் ஆவேசம்
இது ஒருபுறமிருக்க, இங்கு நடந்து வரும் பணியால் ஆங்காங்கே குழிகள் தோண்டும் போது வீடு, பனியன் நிறுவனங்களின் குடிநீர் குழாய் இணைப்புகள் உடைந்து விடுகின்றன. இதனால் அடிக்கடி குடிநீர் வினியோகம் தடைபடுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், இவ்வாறு குழாய்கள் உடையும் போது அவற்றை சரிசெய்வதற்கு அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை என்றும், இதற்கு அதிக பணம் கேட்கின்றனர் எனவும் பொதுமக்கள் ஆவேசமடைகின்றனர். எனவே நீண்ட நாட்களாக இங்கு நடந்து வரும் பணியை விரைந்து முடித்தால் தான் அனைவருக்கும் நிம்மதி என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தை விட தற்போது பணியில் சற்று வேகம் பிறந்துள்ளது. அதில் மீண்டும் சுணக்கம் ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.