'பெண்கள் பாதுகாப்பு திட்டம்' தொடங்கி 3 நாட்களில் 60 அழைப்புகள்


பெண்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கி 3 நாட்களில் 60 அழைப்புகள்
x
தினத்தந்தி 25 Jun 2023 2:51 AM IST (Updated: 25 Jun 2023 2:58 AM IST)
t-max-icont-min-icon

'பெண்கள் பாதுகாப்பு திட்டம்' தொடங்கி 3 நாட்களில் 60 அழைப்புகள் வந்துள்ளதாக ஈரோட்டில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ஈரோடு

பெண்கள் பாதுகாப்பு திட்டம்' தொடங்கி 3 நாட்களில் 60 அழைப்புகள் வந்துள்ளதாக ஈரோட்டில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

டி.ஜி.பி. ஆய்வு

ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரெயில் மூலம் நேற்று ஈரோடு வந்தார். பின்னர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை, போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் உற்சாகமாக வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பெண்கள் பாதுகாப்பு திட்டம்

பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெகுமதி வழங்கி பாராட்டினார். இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 'பெண்கள் பாதுகாப்பு திட்டம்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

60 அழைப்புகள்

இந்த திட்டத்தின் மூலம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள் 1091, 112, 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே போலீஸ்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்து செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பெண்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களில் மட்டும் 60 அழைப்புகள் போலீஸ்துறைக்கு வந்துள்ளது. தூரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் போலீஸ்துறை ரோந்து வாகனத்தில் அழைத்து சென்று விடப்படும். தூரம் அதிகமாக இருந்தால் ஆட்டோ அல்லது டாக்சிகளில் அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் அவர்கள் பாதுகாப்புக்காக போலீஸ்காரர் ஒருவரும் உடன் செல்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீரப்பனுடன் 4 முறை சண்டை

இதைத்தொடர்ந்து கோபிக்கு சென்ற அவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் முதல் முதலாக பணிபுரிந்த கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தையும் பார்வையிட்டு பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், '1989-ம் ஆண்டு போலீஸ் துறையில் எனது முதல் பணி கோபியில் தொடங்கியது. அன்றைய காலகட்டத்தில் வீரப்பன் பிரச்சினை தான் இங்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. வீரப்பனுடன் 4 முறை துப்பாக்கி சண்டை நடத்தி உள்ளேன். அப்போது மிகப்பெரிய சவாலான உட்கோட்டமாக இருந்த நிலையில், இன்று கோபி மிக அமைதியாக உள்ளது,' என்றார்.


Related Tags :
Next Story