பிளஸ்-1 வகுப்பில் 60 மாணவர்கள் சேர்ந்தனர்
குன்னூர் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 வகுப்புக்கு 60 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோத்தகிரி,
குன்னூர் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 வகுப்புக்கு 60 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
போட்டி தேர்வுகள்
நீலகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், குன்னூர் வசம்பள்ளம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் அரசு மாதிரி பள்ளி கடந்த அக்டோபர் மாதம் 12-ந் தேதி தொடங்கப்பட்டது. 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 39 பேர் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 8 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். இங்கு படிக்கும் மாணவர்கள் பள்ளியிலேயே தங்கி படித்து போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், உணவு, தேநீர், இருப்பிடம் போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது. வழக்கமான வகுப்புகள் முடிந்த பின்னர், மாலையில் 2 மணி நேரம் நீட் உள்பட பிற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் படித்து வரும் 163 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறப்பு பயிற்சி
தொடர்ந்து நேற்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் 60 பேர் பள்ளியில் சேர்ந்தனர். இதுகுறித்து பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சரவணகுமார் கூறும்போது, போட்டி தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார் படுத்தும் வகையில் தமிழக அரசு 25 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கி உள்ளது. இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் அதிகளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட திறமையை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து, இலக்கை எய்திட வழிகாட்டி அதற்கான சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறோம். மாதிரி பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் எந்த போட்டி தேர்வுகளையும் எளிதில் எதிர்கொண்டு, அதில் வெற்றி பெறும் வகையில் தயார்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.