60 வேலம்பாளையம் பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்
60 வேலம்பாளையம் பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவர்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு:
60 வேலம்பாளையம் பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாணவர்கள் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். 60 வேலம்பாளையம், குப்பையண்ணன்காடு பகுதியை சேர்ந்த மாணவர்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஈரோட்டில் இருந்து 60 வேலம்பாளையம், குப்பையண்ணன்காடு பகுதிக்கு 10-ம் எண் கொண்ட டவுன் பஸ் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். எங்கள் கிராமத்தில் இருந்து அறச்சலூர், அவல்பூந்துறை வழியாக காலை 5 மணி, 7, மணி 8.30 மணி என 3 நேரம் இயக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட காலை 7 மணி பஸ் தற்போது வரை இயக்கப்படவில்லை.
தற்போது பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் செயல்படுவதுடன், காலை 7.30 மணி, 8 மணி, 8.30 மணி போன்ற நேரத்துக்கு சிறப்பு வகுப்புகள் செயல்படுவதால், எங்களால் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
இழப்பீடு
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு தலைமையில் விவசாயிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்ட விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. மேலும் தென்னை மரத்துக்கு இழப்பீடாக ரூ.36 ஆயிரத்து 450 வழங்க வேண்டும். ஆனால் ரூ.32 ஆயிரத்து 280 மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல கோடி ரூபாய் இழப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்காமல் உள்ளது. எனவே இழப்பீட்டு தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ், வாடகை டாக்சிகளை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று டாக்சி டிரைவர்கள் மனு கொடுத்தனர். இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.